முன்னேற வேண்டும் என்ற நோக்கில் ஏற்படும் எந்த ஆசையும் தவறல்ல. சின்னச் சின்ன ஆசைகள் என்றால் பரவாயில்லை, பேராசை தவறு என்பது சரியல்ல. ஆசையின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கல. அது அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

Monday, April 25, 2011

தொழில் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

நிர்வாக  இயல், வெற்றிச்  சிந்தனைகள் போன்ற கட்டுரைகளை அளித்து வரும் திரு. பி.ஆர்.சுவாமி இந்தப் புதிய கட்டுரைத் தொடரை இந்த இதழ் முதல் எழுதுகிறார். புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும், இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திச் செல்வது எப்படி என்பது போன்ற பலவற்றையும்  இந்தப் புதிய தொடர் மூலம், தனக்கே உரிய கற்பனைத்திறனுடனும்  , நகைச்சுவை உணர்வுடனும் எழுதத்  தொடங்கியுள்ளார்  திரு பி.ஆர்.சுவாமி. வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  -  ஆசிரியர், நமது பிசினஸ் 

 1 . பணம் படுத்தும் பாடு
கணேஷ் ஒரு நல்ல வேலையில் இருக்கிறார்.  அதிகக் கடினம் இல்லாத வேலை. காலை பத்து மணிக்கு வேலையைத் துவங்கினால், மாலை மணி ஐந்து அடித்ததும்  வீட்டுக்குக் கிளம்பி விடலாம். சனி, ஞாயிறு விடுமுறை. அதைத் தவிர, மதச சார்பற்ற   அரசின் வெகுமதியாக, எல்லா மதத்தினரின் சிறப்பான நாட்களுக்கும் விடுமுறை. காந்தி ஜெயந்தி, கம்பர் ஜெயந்தி என்று வேறு வகையான விடுமுறைகளும் உண்டு. 

இவை தவிர, விடுப்புச் சலுகைகள் ஏராளம். காரணமே இல்லாமல் எடுக்கக் கூடிய கேஷுவல் ('கேஷுவல்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'சாதாரணமான' என்ற பொருளைத்தவிர, 'அலட்சியமான' என்ற இன்னொரு பொருளும் உண்டு!.) விடுப்பு, காரணத்தோடு எடுக்கக் கூடிய மருத்துவ விடுப்பு மற்றும் சுளையாக எடுக்கக் கூடிய 'சம்பாதித்த விடுப்பு' அல்லது 'உரிமை விடுப்பு' என்று பல விடுப்புகள். 

இவ்வளவு 'சுமை'களையும் அனுபவிப்பதற்குப் பரிசாக அவருக்குக் கை நிறைய சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி, உல்லாசச் சுற்றுலாப் படி, ஆண்டுக்கு ஒரு முறை படிப்படியாகவும், மூன்று ஆண்டுகளுக்கு  ஒரு முறை பல படிகளும் உயரும் சம்பள விகிதம், இலவசக் கடன், குறைந்த வட்டிக் கடன், கூட்டுறவுக் கடன், பண்டிகை முன்பணம், வருங்கால  வைப்பு, ஓய்வூதியம் என்று அடுக்கடுக்காகச் சலுகைகள்.
கணேஷ் எங்கே பணி செய்கிறார் என்று நீங்கள்  ஊகித்திருப்பீர்கள். உங்கள் ஊகம் சரியாகவே இருக்கக் கூடும். 
ஆனால் நாம் பார்க்கப் போகும் சங்கதி வேறு.
கணேஷ் அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். குடி, குதிரை, கூத்து, சீட்டு, சின்ன வீடு போன்ற பழக்கங்கள் அவருக்கு இல்லை. அரசின் அறிவுரைப்படி சிறு குடும்பம் அமைத்துச் சிறப்பாகவே குடித்தனம் நடத்தி வந்தார். சிறுகச் சிறுகச் சேமித்துப் பெரும் தொகையாகவும் ஆக்கி விட்டார். 

அப்போதுதான்   அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 'நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. கையில் கொஞ்சம் பணமும் இருக்கிறது. எதாவது பிசினஸ் செய்தால் என்ன?'
தமது என்ணத்தை நெருங்கிய நண்பர்களிடம் சொன்னதும் யோசனைகள் வந்து குவிந்தன. இலவச ஆலோசகர்கள் எங்கெங்கிருந்தோ முளைத்து வந்தனர். . கடைசியில் கணேஷ் தனது பிசினசைத் தேர்ந்தெடுத்தார்.
'அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டும் தொழில்' என்றால் தமிழ்க் குடிமகனுக்குப் புரியும். 'ஃப்ளாட் ப்ரொமோஷன்' என்றால் எல்லாத் தமிழர்களுக்கும் புரியும். 

நஷ்டம் வரவே வாய்ப்பில்லாத தொழில். 

கட்டடம் கட்டுவது பற்றி எதுவுமே தெரியாதவர்கள் கூட, கான்டிராக்ட், சப்-கான்டிராக்ட் என்று விட்டு சுலபமாக வேலையை முடித்து விடலாம்.

மற்ற தொழில்களைப்போல், முழு நேரம் வேலை நடக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியதில்லை. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை போய்ப் பார்த்து வந்தால் போதும். குழந்தை வளர்வதுபோல்,  கண் முன்னே கட்டடம் கிடுகிடுவென்று வளர்ந்து வருவதைக் கண் குளிரக் காணலாம்.
இரண்டு மூன்று ப்ராஜக்ட்கள் முடித்து விட்டால், அப்புறம் கோடீஸ்வரன் தான். எந்த ஒரு லைஃப் லைனோ, முத்திரையோ தேவையில்லை. 
இவ்வளவு சுலபமான, ஆச்சரியமான, லாபகரமான தொழிலில் ஈடுபடாமல் இருப்பது  முட்டாள்தனம் என்று முடிவு செய்து கணேஷ் அதில் இறங்கினார்.

ஒரு நல்ல நாளில் மனைவியின் பெயரில் தொழில் துவங்கினார்.வேளச்சேரி என்று சொல்லப்பட்ட, வேளச்சேரியிலிருந்து பல மைல் தூரத்தில், இரண்டடி தோண்டினாலே தண்ணீர் வரக்கூடிய நிலத்தை (அவ்வளவு மேலே தண்ணீர் இருந்தால் எப்படி அஸ்திவாரம் போடுவது என்று கூட யோசிக்காமல்), வாங்க ஒப்பந்தம் போட்டு, முன்பணம் கொடுத்தார்.

ஆங்கிலத்தில் 'to cut a long story short, என்று ஒரு தொடர் உண்டு. மேலே கதையை வளர்த்தாமல் கூற வேண்டுமானால்,  9 மாதங்களுக்குப் பிறகு, கணேஷின் சொந்தத் தொழிலின் நிலை இது.

1 . சேமிப்பு முழுவதும் காலி. அத்துடன் அலுவலகக் கடன்கள் அதிகபட்சம் எடுத்தது போக, மனைவியின் நகைகள் மீதும் கடன். 

2 . கட்டடம் ஓரளவு எழும்பி, குட்டிச்சுவர்களாகவும், மொட்டைச்சுவர்களாகவும் நிற்கிறது. 

3  மொத்தம்  12 குடியிருப்புகளில், மூன்று மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. அவற்றுக்குப் பகுதிப்பணம்தான   வந்துள்ளது. குடியிருப்புகளை         வாங்கியவர்களில் ஒருவர், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள்,  வீட்டைக் கட்டித்தரவில்லை என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். வழக்கு கிரிமினல் வழக்கு என்பதாலும், தொழில் மனைவியின் பெயரில் நடக்கிறது என்பதாலும், மனைவி மீது கைது உத்தரவு வந்து விடுமோ என்ற பயத்தில், கணேஷ் முன்ஜாமினுக்காக  முயன்று கொண்டிருக்கிறார். 

4 . கடன், வட்டி என்று பலவகையிலும் பணப்பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், குடும்பச் செலவுக்கே பணம் பற்றாத நிலையில், 'தொழிலதிபர்' திருமதி கணேஷ், தான் எப்போதோ கற்ற தட்டச்சுக்கலையை மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டு வந்து, ஒரு சிறு நிறுவனத்தில் மாதம் 1500 ரூபாய் சம்பளத்துக்கு டைப் அடிக்கிறார். 

கணேஷுக்கு என் இந்த நிலை? 

,பேராசை பெரு நஷ்டம்,' 'வேலையில் இருப்பவர்கள் தொழிலில் ஈடுபடக்கூடாது ' என்றெல்லாம் நீதிபோதனை செய்வதற்காக நான் இந்தக்கதையைக் கூறவில்லை. முன்னேற வேண்டும் என்ற நோக்கில் ஏற்படும் எந்த ஆசையும் தவறு அல்ல. 'சின்னச் சின்ன ஆசைகள் என்றால் பரவாயில்லை, பேராசை தவறு' என்பதும் சரியல்ல. ஆசையின் அளவு எப்படி வேண்டுமானால் இருக்கலாம. அது ஒவ்வொருவரின் மனப்பான்மையைப் பொறுத்தது.

மனிதன் பறவைகளைப்போல் தானும் வானில் பறக்க வேண்டும் என்று நினைத்தது பேராசை அல்ல. அதுபோல் வேறு கோள்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்று நினைப்பதும்  தவறல்ல.

பறக்க வேண்டும் என்றால் சிறகு வேண்டும். எனக்குச் சிறகு இருக்கிறதா? இல்லை. அப்படியானால் என்னால் செயற்கையாகச் சிறகு வளர்த்துக்கொள்ள முடியுமா? எப்படி?

இப்படியெல்லாம் சிந்தித்துத்தான் ரைட் சகோதரர்கள் மனிதனால் பறக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

அப்படியானால் கணேஷ் செய்த தவறு என்ன? இதைப் புரிந்து கொள்ள இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

சின்னசாமி ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். சிறிதாகத் துவங்கி வளர்ந்த வியாபாரம். எப்போதும் கடையில் பத்து பேர் நிற்பார்கள். சற்று நேரம் நின்று, காத்திருந்துதான்  பொருட்களை வாங்க முடியும் . அவ்வளவு பிஸியான வியாபாரம்.

காலையில் 6 மணிக்குக் கடையைத் திறந்தால்  இரவு 10 மணிக்குக் கடையை அடைக்கும் வரை தொடர்ந்து சுறுசுறுப்பான  வியாபாரம். சாப்பாட்டுக்குக் கூட நேரம் இல்லை. கடையில் இருக்கும் தின்பண்டண்டங்களையே அவ்வப்போது கொஞ்சம் கொறித்துக் கொள்வதும், எதிரிலிருந்த டீக்கடையிலிருந்து வரும் டீயும்தான் சின்னசமிக்குப் பக(லி)ல் உணவு. இரவு வீட்டுக்குப் போய்த்தான் சாப்பாடு. உண்ட களைப்பில் என்று சொல்வதைவிட, உழைத்த களைப்பில், உடனே உறக்கம். மீண்டும் அதிகாலையிலேயே கடைக்கு ஓட்டம். 

சின்னசாமிக்கு  வாழ்க்கை ஆனந்தமாய்ப்  (ஆமாம், ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டியிருந்தாலும், தொழில் வெற்றிகரமாக நடப்பது எவருக்கும் ஆனந்தத்தைத்தனே அளிக்கும்!)  போய்க்கொண்டிருந்தது. சில்லறையை* எண்ணக்ககூட நேரமில்லை. இரவு அவர் சாபபிடும்போது மனைவிதான்  பணத்தை எண்ணி அன்றைய வரவு எவ்வளவு என்று சொல்வாள். வேலையை விரும்பிச் செய்ததால் சின்னசாமிக்கு நாள் முழுவதும் கடையில் நின்றபடியே வேலை செய்தது களைப்பைத் தரவில்லை. காலையில் எழுந்து கடையைத் திறப்பதுதான் தெரியும். கண்ணிமைபபதற்குள் இரவு 10 மணி வந்து விட்டதுபோல் நேரம் ஒடி விடும். 

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுமுறை. அன்று மனைவி குழந்தைகளுடன் வீட்டில் கலகலப்பு. அல்லது சினிமா, ஊர் சுற்றல் என்று பொழுதுபோக்கு. ஆனால் ஞாயிறு  அன்று கடை இல்லையே என்று வாடிக்கையாளர்கள் அலுத்துக் கொள்வார்கள்.

தனக்கு எவ்வளவு லாபம் வருகிறது என்று சின்னசாமிக்குத் தெரியாது. ஆனால் கணிசமாக வருகிறது என்று தெரியும். கடைக்குப் பொருட்கள் கொண்டு போடுபவர்களுக்கு உடனே பணம் கொடுத்து விடுவார். யாரிடமும் கடன் வைத்துக் கொள்வதில்லை. யாருக்கும் கடன் கொடுப்பதும் இல்லை. கடை வாடகையும் இல்லை. தினமும் கல்லாவில் மிஞ்சும் தொகையில் பெரும்பகுதியை மனைவியிடம் கொடுத்து விடுவார். வீட்டுச் செலவு போக, மனைவி புடவை, நகை என்று வங்கிக் கொள்வதுடன், ரொக்கமும் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறாள் என்று அவருக்குத் தெரியும்.

சின்னசாமிக்கும் ஒருநாள் சனி பிடித்தது. ஒருநாள் கடையில் கூட்டம் இல்லாமல் இருந்த சமயத்தில், அவருடைய வடிக்கையளர் ஒருவர் ஒரு யோசனை சொன்னார். "உன் கடைக்கு இத்தனை பேர் வருகிறார்களே, நீ சீட்டுப் பிடித்தால் நிறைய சம்பாதிக்கலாமே!"

"அதெல்லாம் நமக்கு எதுக்குங்க? கடை வியாபாரம் நல்லாவே இருக்கு. அதுவே போதும்." என்று சின்னசாமி சொன்னாலும், விஷயம் இதோடு முடிந்து விடவில்லை. இதை அவர் தன மனைவியிடம் சொன்னபோது, மனைவியும் இந்த யோசனையை ஊக்குவிக்க, சின்னசாமி சீட்டுப் பிடிப்பதில் இறங்கினார்.

சீட்டுத்தொழிலுக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு. நிறைய உறுப்பினர்கள் சேர, பணப்புழக்கம் அதிகமாகியது. ஆரம்பத்தில் சின்னசாமிக்குக் கணக்கு வைத்துக் கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும், விஷயம் தெரிந்த நண்பர்களின் உதவியுடன் ஓரளவு கணக்குப் புத்தகங்களை முறையாக உருவாக்கி, அவற்றைச சரியாக நிர்வகிக்க ஒரு ஆளையும் நியமித்து விட்டார். 

சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓடியது சீட்டுத் தொழில். அதன் பிறகு, சீட்டு எடுத்தவர்களில் சிலர் பணம் கட்டத் தவறினர். பணம் கட்டாததால் கடைக்கு வருவதையும் நிறுத்திக் கொண்டனர். தங்களைச்  சீட்டில் சேருமாறு சின்னசாமி கேட்டுக் கொண்டதால் அதிருப்தி அடைந்த சில வாடிக்கையாளர்களும் கடைக்கு வருவதை நிறுத்தினர்.

சீட்டுத் தொழில் அதிக நேரத்தை விழுங்கியதால், வியாபாரத்தில் கவனம் குறைந்தது. 

கடைப்பணம், சீட்டுப்பணம் எல்லாம் கலந்து போய், கடைக்குப் பொருட்கள் சப்ளை செய்பவர்களுக்கும் கடன் சொல்ல ஆரம்பித்தார் சின்னசாமி.

பண நெருக்கடி முதலில் சிறிதாகத் துவங்கி கிடுகிடுவென்று வளர்ந்து விட்டது.  ஒரு புறம் வியாபாரம் குறைய, மறுபுறம், சீட்டு எடுத்தவர்களும், சீட்டு கட்டி முடித்தவர்களும் பணத்துக்கு நெருக்க, மாதாந்தர சீட்டுத் தொகை சரியாக வசூல் ஆகாத நிலையில், தான் ஒரு பெரும் சிக்கலில் மாட்டிகொன்டத்தை சின்னசாமி உணர்ந்தார்.

சீட்டுப்பணம் கிடைக்காத ஒருவர் போலீசில்   புகார் செய்ய, சின்னசாமியை போலீஸ் கைது செய்தது. முறைப்படி பதிவு செய்து கொள்ளாமல் சீட்டுத்  தொழில் நடத்தியதற்காகவும், சீட்டுப் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்காமல் மோசடி செய்ததற்காகவும் சின்னசாமிமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீட்டுத்தொழில் சின்னசாமியின் பெட்டிக்கடை வியாபாரத்தையும், வாழ்க்கையையும் ஒருங்கே நாசம் செய்து விட்டது.
கணேஷ், சின்னசாமி இருவரும் ஒரு அடிப்படையான தவறைச் செய்து விட்டனர்.

'தெரியாத தொழிலில் இறங்குவது' என்பதுதான் அந்தத் தவறு.

அப்படியானால், தெரியாத தொழிலில் இறங்கக்கூடாதா? பெரும்பாலோருக்கு  எந்தத் தொழிலுமே தெரியாதே? ஒரு தொழிலில் இறங்காமலேயே அதைப்பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

ஒரு தொழிலில் கவனமாக இறங்குவதற்குப் பல வழிகள் இருக்கின்றன.

அவை என்னவென்று பார்ப்பதற்கு முன், கணேஷும், சின்னசாமியும் செய்ததைப் போன்ற  தவறுகளைச் செய்த சில பெரிய நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.
.* இந்தக் கட்டுரை எழுதப்பட்ட 2001 - ஆம் ஆண்டில், சில்லறைக் காசுகள் நிறையவே புழக்கத்தில் இருந்தன!